திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Sunday, June 15, 2008

என் அப்பன்



தந்தையர் தினத்தன்று வாழ்க்கைக்கு நல்வழி காட்டி சென்ற தந்தையைப் பற்றிய சில நினைவுகள்.


உண்டாக்கிவிட்ட தெய்வங்கள்


திங்கள் கிழமையன்று எங்கள் ஊருக்கு கிராமத்தில் இருந்து புத்துருக்கு நெய் வரும், காலையில் தூக்கு போசி எடுத்துக் கொண்டு தந்தையார் செருப்பை மாட்டிக்கொண்டு நெய் வாங்கச் செல்வார். நானும் என் தம்பியுக் கூடவே ஆளுக்கு ஒரு பக்கம் கையைப் பிடித்துக்கொண்டு ஓடுவோம். அவர் நடக்கும் வேகம் அவ்வளவு.
பஜார் கடை முக்கில் கூடைகளில் நெய் வைத்துக் கொண்டு குடியானவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள், எங்க அப்பா ஒரு துளி வாங்கி கையில் பெரு விரலுக்குக் கீழே தடவி மோந்து பார்ப்பார் இந்த நெய் நன்றாக இல்லை வா அடுத்தவரிதம் செல்வோம் என்று வேறு ஒருவரிதம் செல்வார், இவ்வாறு மிகுந்த மணமான நெய்யை தூக்கு போசியில் வாங்கிக்கொண்டு வருவோம். யார் போசியை தூக்கிக் கொண்டு வருவது என்பதில் எனக்கும் தம்பிக்கும் போட்டி கடைக்குட்டி என்பதால் அவனுக்குத் தான செல்லம் அதிகம்.
அவ்வாறு வாங்கிக் கொண்ட நெய்யை சூடான் சாப்பாட்டில் மதியம் கலந்து சிறிது உப்பு போட்டு பிசையும் போது வீடு முழுவதும் அருமையான மணம் வீசும், மணம் வந்தவுடன் நாங்கள் சிறுவர்கள் அறுவர் அவரை சுற்றி வந்து அமர்ந்து கொள்வோம். அனைவருக்கும் அந்த நெய் சோற்றை உருண்டையாக உருட்டி ஊட்டி விடுவார். அனைவரும் அதற்காகவே திங்கட்கிழமைக்காக காத்திருப்போம்.

அவர் வேலை பார்த்த மில் சொந்தக்காரர் பங்களாவில் செம்பருத்தி பூக்கள் அதிகம் பூத்திருக்கும் ஞாயிற்றுக்கிழமையன்று பங்களா சைக்கிளில் சென்று செம்பருத்தி பூவை பறித்துக் கொண்டு வருவார். அதை வைத்து என் அம்மா சம்பருத்திப் பூ சர்பத் செய்வார். இஷ்டப்படும் போது த்ண்ணீர் கலந்து குடிப்போம்.

எங்கள் குலன் வணிக குலம், எமது சொந்தக்காரர்கள் எல்லாம் பீஸ் துணி வியாபாரம் செய்பவர்கள் மாறாக எங்கள் ஊரில் முதல் முதலாக Intermediate படித்து முடித்தவர் எங்கள் தந்தை, எனவே அவருக்கு நகராட்சி அலுவலகத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது. எனவே எங்கள் குலத்தின் பெரிய தனக்காரர் அவர். எனவே எங்கள் ஊரில் கோயில்களில் அவருக்கு தனி மரியாதை உண்டு. அவருடன் நவராத்திரி நாட்களில் நடராசரின் அம்பலத்திற்குள் உள்ளே சென்று நின்று அம்மையப்பனை தரிசித்ததும், மாரியம்மன் கோயிலில் கட்டளை தினத்தன்று பிரசாதம் வாங்கியதும், காமாக்ஷியம்மன் கோவிலில் மரியாதை பெற்றதும் இன்றும் பசுமரத்தாணி போல மனதில் உள்ளது. இன்றும் ஆன்மீகத்தில் இருப்பதற்க்கு அவரே முதல் காரணம். அடுத்தது என் அன்னை சாப்பிடாமல் அடம் பிடிக்கும் போது எனக்கும் என் தம்பிக்கும் கம்பா ந்திக்கதை, மாணிக்க வாசகர் கதை, இராமாயணம், மஹாபாரதம், என்ற கதைகள் கூறி வயிற்றுக்கான உணவுடன், ஆன்மீக உணவையும் ஊட்டியவர்.

என் தந்தையைப் பற்றி எழுதும் போது நூலகத்திற்க்கு அவர் என்னை அறிமுகப்ப
டுத்தியதை சொல்லாமல் இருக்க முடியாது. அவர் எங்கள் ஊரின் மத்திய நூலகத்தின் உறுப்பினர், நான் ஐந்தாவது படிக்கும் போதே என்னையும் உறுப்பினராக ஆக்கி விட்டார், அவர் தினமும் புத்தகம் படிக்காமல் இருக்க மாட்டார், அவரைப் பார்த்தே நானும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன். சரித்திர நாவல்கள், பொன்னியின் செல்வன், சாண்டில்யன் நாவல்கள் என்று ஆரம்பித்து எவ்வளவோ புத்தகங்களை வாசித்துள்ளேன் இந்த தந்தையர் தினத்தில் அவ்ருக்கு நன்றிகள்.

ஆனால் இவ்வளவு அன்புதன் இருப்பவர்கள் நம்முடன் நிறைய நாட்கள் இருக்கமாட்டார்கள் என்பதற்கிணங்க ஒரு நாள் சைக்கிளில் செல்லும் போது ரயில்வே கிராசிங்கில் கீழே விழுந்து இடுப்பை முறித்துக் கொண்டார், எவ்வளவோ வைத்தியம் பார்த்தோம், கோயம்பத்தூர் தெலுங்கு பாளையம் கொண்டு சென்றோம் , வயதானதால் எலும்பு கூடவில்லை, முனிசிபாலிட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் கன்னிகாபரமேஸ்வரி பள்ளியிலும், பின் மில்லிலும் கடைசி வரை வேலை பார்த்த அவரை அது படுக்கையில் சாய்த்து விட்டது, அதன் மூலம் அவருக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது, அவருக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடம்பு துடைத்து விடுவது, பெட்பேன் வைத்து அதை எடுத்துக் கொண்டு சென்று சுத்தம் செய்வது, லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் எடுத்துக்கொண்டு வந்து தருவது என என்னால் முடிந்த அனைத்து சேவைகளையும் செய்தேன்.

நான் எட்டாவது படிக்கும் போது இந்த உலக வாழ்க்கை போதும் என்று எனது தமைக்கயர் இருவரும் எப்போதும் தங்கள் காலில்தான் நிற்க வேண்டும் என்று அவர்கள் இருவரையும் டீச்சர் டிரெயினுன்க்கிற்க்கு சேர்த்து இருவரையும் டீச்சராக்கிய எங்கள் தந்தையார் மறைந்தார். ஆனால் அவர் நினைவுகள் மட்டும் இன்றும் மறையவில்லை. தந்தையர் தினத்தன்று அவருக்கு அனந்த கோடி வணக்கங்கள்.

2 Comments:

Blogger சீமாச்சு.. said...

கைலாசி, தந்தையின் நினைவுகளைச் சுவை பட எழுதியுள்ளீர்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் போது தந்தையை இழப்பதென்பது கொடுமை.

அவர் ஆசிகள் உங்களை வாழ்த்தட்டும்.

அன்புடன்
சீமாச்சு...

July 20, 2008 at 7:44 PM  
Blogger S.Muruganandam said...

நன்றி சீமாச்சு அவர்களே.

July 20, 2008 at 8:45 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home