திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Saturday, February 23, 2008

ஒரு அறிமுகம்

உடுமலைப்பேட்டையில் எனது பசுமை நிறைந்த நினைவுகள்


வாங்க அண்ணா, வாங்க அம்மிணீ. கொஞ்சம் கொங்கு காற்றின் மணத்தை சுவாசிங்கோ. தென் ஊட்டி, உடுமலைப்பேட்டை என்ற சொந்த ஊருங்க. இப்போ சென்னை வந்துட்டேங்க. சின்ன வயசுல பண்ணுண சேட்டைகளை கொஞ்சம் எழுதறேங்க. முடிஞ்சா புடிச்சா படிச்சுட்டு போங்க.

அந்த பக்கம் கேரளாவின் மூணாருங்க, இந்த பக்கம் எங்க ஊருங்க நடுவாலா மேற்கு தொடர்ச்சி மலைங்க.

பம்பன்: அண்ணே! என்னடா? மலைன்னா டேம் இருக்குமே உங்க ஊருகிட்டயும் இருக்குதாண்ணே?

ஆமாண்ணே, ஒண்ணல்ல ரெண்டு டேம் இருக்குதுடா. திருமூர்த்தி டேம் ஒண்ணு, அமராவதி டேம் ஒண்ணு.

பாலக்காட்டு கண்வாய் மூலமா குளிர் காற்று சல சலன்னு எப்பவும் வீசுறதால் என்ற ஊரை தெற்கு ஊட்டின்ன கூப்புடறாங்க.

எங்கள் ஊருல ஒரு வழக்கம் உண்டு யாராவது தப்பா நடந்துகிட்டா, "இது திருமூர்த்தி மண் , தலைகீழாக விழாதேன்னு" சொல்லுவாங்க.

பம்பன்: அது எதுக்குண்ணே! திருமூர்த்தி மலையில நம்ம சாமி பிரம்மா, விஷ்ணு, சிவன் ரூபமா திரிமுர்த்தி ரூபமா இருக்காருல்லா அதனால சரியா நடந்துக்கோன்னு சொல்றதுக்கு.

இந்த திருமூர்த்தி மலைல்ல வேற என்ன விசேஷம்ண்ணே? ஒரு அருவி இருக்கு, பஞ்ச லிங்கம் இருக்கு ஜாலியா மலையேறி பஞ்சலிங்கம் போலாம். அருவில குளிக்கலாம், சாமி கும்பிடலாம், டேம்ல போட் சவாரி போலாம். மீன்னு வாங்கி பொங்கி திங்கலாம்.

பம்பன்: உடுமலைப்பேட்டைன்னு பேரு எதனால வெச்சாங்கண்ணே?

ஒரு காலத்துல இந்த மலைல உடும்புகள் ஜாஸ்தியா இருந்ததால உடும்பு மலைங்கறது மாறி உடுமலை ஆயிடுச்சுன்னு சொல்றாங்கடா.

பம்பன்: உடும்புக்கறி சூப்பரா இருக்கும்ணு சொல்றாங்களே, எனக்கு எப்பண்ணே விருந்து வெக்கப் போறீங்க?

ஆமா உப்ப அங்க எங்க உடும்பு இருக்கு, வெறும் எறும்புதான் இருக்கு.

பம்பன்: ரொம்ப பெரிய ஊராண்ணே?

பழைய காலத்து நகராட்சி, சுத்து வட்ட கிராமங்களுக்கு இதுதாண் பெரிய டவுனு. நகராட்சி கட்டிடம் 1939ம் ஆண்டு கட்டப்பட்டது , தாகூர் மாளிகை ன்னு கூப்பிடறாங்க. நகராட்சி பில்டிங்க வளாகத்தில ஒரு செயற்கை நீர் ஊற்று அதில் திருமூர்த்தி சிலை. ஏக பாத மூர்த்தி போல் இரு புறமும் பிரம்மாவும், விஷ்ணுவும் தாங்கி சிவன் நிற்கும் கோலம்.

ப்ம்பன் உங்க ஊரோட விசேஷம் என்னண்ணே?

ஊருக்கு நடுவால இருந்த குட்டை, குட்டைக்கு நடுவால காந்தி சிலை. நான் சின்னப் பயலா டவுசர் போட்டு அழைந்த காலத்தில் பெரிய குட்டை இருந்தது.

எங்க வாத்தியார் சொல்லுவாரு தமாஷா காந்தியை யாரும் திருடீட்டுப் போயிறக்கூடாதுன்னு, குட்டைக்கு நடுவுல கொண்டு போய் வெச்சிருக்கோங்கன்னு.

குட்டையை சுத்தியும் பூவரச மரங்க மார்கழி மாசத்துல பூவரசம்பூ பறிப்போம். புளிய மரங்க, ஒரு பக்கம் லைப்ரரி, ஒரு பக்கம் மசூதி, பந்தல் சாமான்கள் கடைகள் எல்லாம் சுத்து இருந்ததுண்ணே.

மழை பெஞ்சவுடனே தவக்களைளோட கச்சேரி ஆரம்பமாகிடும், கொர், கர், பர்ன்னு ஒரெ கும்மாளமா இருக்கும். அடுத்த பதினைந்து நாட்களில் குட்டை ஃபுல்லா வால் மீனுல அடுத்த ஒரு வாரத்துல்ல ரோடு ஃபுல்லா தவக்கா குட்டிகளா மேயும்.

குட்டையில் நண்டு பிடிப்பதே ஒரு தனி சுகம். ஆனா சட்டை ஃபுல்லா சேறாகி அம்மா கிட்ட அடி வாங்கறது அதை விட தனி சுகம்ண்ணே. வேலியில் ஓடக்காணப புடிச்சு அதுக்கு கள்ளிப் பாளை ஊத்தி மச புடிக்க வக்கறது அத விட சூப்பர்ண்ணே.

வேற என்ன செய்வீங்கண்ணே?

பொன் வண்டைப் புடுச்சு தீப்பெட்டியில போட்டு அதுக்கு அரப்பு இலையை போட்டு அழகு பார்ப்போம்ண்ணே.

ஸ்கூலுக்கு பின்னால உள்ள, தாலுகா ஆபிசில் உள்ள புளிய மரங்களில் புளியம் தலை, பிஞ்சி, துவரை, பழம் புடுங்கி தின்னுட்டு , போரடித்தால் கிரிக்கெட் வெளையாடுவோம்ண்ணே.

வேற எண்ணணே சொல்லலாம் உங்க ஊரைப் பத்தி .

ஒரு காலதுல த்ண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடிய ஊருணு சொல்லுவாங்க, யாரும் எங்க ஊருக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்களாம், ஏனென்றால் கால் கழுவ சோடா வாங்கித்தான் கால் கழுவணும்னு .

அப்ப உங்க ஊருல இருக்கற பசங்களுக்கு கல்யாணமே ஆகாதாண்ணே?

அது பழைய காலம். சாதிக் பாஷா அவங்க முயற்சியால் திருமூர்த்தி அணையிலிருந்து த்ற்போது தண்ணி வருது இப்ப ஒன்னும் பிரச்னையில்லை.

ஊரைச் சுத்தி நான்கு பஞ்சு மில்கள், கிழக்கால S.V மில், மேக்கால பிரிமியர் மில். தெக்கால பழனியாண்டவர் மில். ஈரப்பதம் மிகுந்த காற்று அதுவும் அதிக வேகமா வீசுறதால பஞ்சு இழைகள் அறுந்து விடாது எங்கறதால் பஞ்சை சுத்தப்படுத்தி நூலாக நூற்று முன்ன கோயம்புத்தூருக்கும் , இப்ப திருப்பூருக்கும் அனுப்புகிட்டிருக்கறாங்க. ஊருல நிறைய குடும்பம் வாழ்றது இந்த மில்களை நம்பித்தாண்ணே.

ரொம்ப இன்டரஸ்டிங்கா இருக்குதுண்ணே, வாங்க வந்து அந்தக்

காலத்து நெனவுகளை பகிர்ந்துக் கோங்கோ.