திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Monday, June 23, 2008

கொலை கொலையா வாழைக்கா( முந்திரிக்கா ????)

இந்த விளையாட்டை சின்ன வயசிலே வெளையாடதவங்களே இருக்க மாட்டீங்க.
வாங்கண்ணே, வாங்க அம்மிணி , ஜிலேபி சாப்புட்டு, சாப்புட்டு எல்லாருக்கும் திகட்டி இருக்கும் வாழைப்பழம் (வாளப்பளம், வாஷப்பஷம் இல்லீங்கோ). குலை குலையா வாழக்கா தொடர் போட்டி ஆரம்பிக்கலாங்க.








(ஒன்னுமாகது படத்து மேலே கிளிக்குங்க)

இந்த குலையில மொத்தம் 5042 பழம் இருக்குங்கண்னே. ஒரு கவிதை எழுதுன்னா 3 பழம், ஜோக்கு சொன்னா 2 பழம், கட்டுரை எழுதுன்னா 1 பழம், ஒன்னுமே எழுதாம பாத்துட்டுப்போனா 10 பழம் சாப்புட்டு என்சாய் பண்ணுங்கோ


ஒரு கவுஜை

என்ன உரம் போட்டாய் நண்பா
அதை சொல்லு நீ அன்பா

பழுத்தா சொல்லி அனுப்புங்க
பங்குக்கு வாரேன் சொகுசா

இது என்ன அனுமார் வாலா? இல்லை
வானத்தையும் பூமியையும் இனைக்கும் பாலமா?

நன்றிகள் நண்பர் GVK உன்னிதன் அவர்களுக்கு படத்தை அனுப்பியதற்காக.

Tuesday, June 17, 2008

தசாவதாரம்

நெட்டில் லேட்டஸ்ட் திரைப்படங்களைத் தேடிப்பிடிப்பதில் தீபிகா கில்லாடி. விகடனில் முதல் விமர்சனம் வரும் முன் படத்தைப்பார்த்தால் தான் அவளுக்கு திருப்தி. சிலசமயம் songs audio-வும் கிடைத்துவிடும். (சிவாஜியின் "சஹானா" பாடல் எப்போதோ கேட்டாயிற்று...)

மிகுந்த ஆர்வத்துடன் அவள் நெட்டில் June-13 முதல் தேடியது "தசாவதாரம்". கிடைக்கவில்லை. நம் மக்களின் review வேற அவள் pulse-ஐ ஏற்றியது...

போதாக்குறைக்கு சென்னையிலிருந்து தீபிகாவின் அக்கா படத்தைப்பார்த்து "நல்லாத்தான் இருக்கு...ஆனா சில scenes அவ்வளவா புரியலை..." என்றதும், நான் உடனே "அப்படின்னா... படம் Super-ன்னு அர்த்தம்" என்று சொல்லிவைக்க, tension இன்னும் கூடியது.

சனிக்கிழைமை தான் சென்னை சென்ற பிள்ளைகள் இரண்டுபேரும் 'பிரார்த்தனா'வில் பார்த்ததாகப் புல்லரிக்க....

You Tube-ல் கிடைத்த bit-களை உதறித்தள்ளிவிட்டு....நேற்றுதான் அடித்தது Luck! "VoW, தசாவதாரம் முழு படமும் upload பண்ணியிருக்காங்க..." என்று விசிலடிக்காத குறையாய் அவள் கூச்சலிட... படம் முழுவதும் download செய்து (2-3 நிமிஷம் தான்), பசங்க இந்தியா போய்விட்டதால் இன்றிரவே பார்த்துவிடலாம் "ஒரு கை" என்று தீர்மானித்து, PC--TV connection தயார் பண்ண ஆயத்தமாகி, light எல்லாம் dim பண்ணி, quick-ஆ ஒரு "ambience" set-up செய்து, படத்தை ஆரம்பித்தால்..... "ஜெமினிகணேசன், பானுமதி நடித்த தசாவதாரம்" நாதஸ்வரம், மேளத்துடன் ஓடுகிறது.......!!

சே... upset of the day!

இது என்னுடைய அனுபவம் அல்ல அமெரிக்காவில் உள்ள என் நண்பன் ஒருவனின் அனுபவம்.

Sunday, June 15, 2008

என் அப்பன்



தந்தையர் தினத்தன்று வாழ்க்கைக்கு நல்வழி காட்டி சென்ற தந்தையைப் பற்றிய சில நினைவுகள்.


உண்டாக்கிவிட்ட தெய்வங்கள்


திங்கள் கிழமையன்று எங்கள் ஊருக்கு கிராமத்தில் இருந்து புத்துருக்கு நெய் வரும், காலையில் தூக்கு போசி எடுத்துக் கொண்டு தந்தையார் செருப்பை மாட்டிக்கொண்டு நெய் வாங்கச் செல்வார். நானும் என் தம்பியுக் கூடவே ஆளுக்கு ஒரு பக்கம் கையைப் பிடித்துக்கொண்டு ஓடுவோம். அவர் நடக்கும் வேகம் அவ்வளவு.
பஜார் கடை முக்கில் கூடைகளில் நெய் வைத்துக் கொண்டு குடியானவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள், எங்க அப்பா ஒரு துளி வாங்கி கையில் பெரு விரலுக்குக் கீழே தடவி மோந்து பார்ப்பார் இந்த நெய் நன்றாக இல்லை வா அடுத்தவரிதம் செல்வோம் என்று வேறு ஒருவரிதம் செல்வார், இவ்வாறு மிகுந்த மணமான நெய்யை தூக்கு போசியில் வாங்கிக்கொண்டு வருவோம். யார் போசியை தூக்கிக் கொண்டு வருவது என்பதில் எனக்கும் தம்பிக்கும் போட்டி கடைக்குட்டி என்பதால் அவனுக்குத் தான செல்லம் அதிகம்.
அவ்வாறு வாங்கிக் கொண்ட நெய்யை சூடான் சாப்பாட்டில் மதியம் கலந்து சிறிது உப்பு போட்டு பிசையும் போது வீடு முழுவதும் அருமையான மணம் வீசும், மணம் வந்தவுடன் நாங்கள் சிறுவர்கள் அறுவர் அவரை சுற்றி வந்து அமர்ந்து கொள்வோம். அனைவருக்கும் அந்த நெய் சோற்றை உருண்டையாக உருட்டி ஊட்டி விடுவார். அனைவரும் அதற்காகவே திங்கட்கிழமைக்காக காத்திருப்போம்.

அவர் வேலை பார்த்த மில் சொந்தக்காரர் பங்களாவில் செம்பருத்தி பூக்கள் அதிகம் பூத்திருக்கும் ஞாயிற்றுக்கிழமையன்று பங்களா சைக்கிளில் சென்று செம்பருத்தி பூவை பறித்துக் கொண்டு வருவார். அதை வைத்து என் அம்மா சம்பருத்திப் பூ சர்பத் செய்வார். இஷ்டப்படும் போது த்ண்ணீர் கலந்து குடிப்போம்.

எங்கள் குலன் வணிக குலம், எமது சொந்தக்காரர்கள் எல்லாம் பீஸ் துணி வியாபாரம் செய்பவர்கள் மாறாக எங்கள் ஊரில் முதல் முதலாக Intermediate படித்து முடித்தவர் எங்கள் தந்தை, எனவே அவருக்கு நகராட்சி அலுவலகத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது. எனவே எங்கள் குலத்தின் பெரிய தனக்காரர் அவர். எனவே எங்கள் ஊரில் கோயில்களில் அவருக்கு தனி மரியாதை உண்டு. அவருடன் நவராத்திரி நாட்களில் நடராசரின் அம்பலத்திற்குள் உள்ளே சென்று நின்று அம்மையப்பனை தரிசித்ததும், மாரியம்மன் கோயிலில் கட்டளை தினத்தன்று பிரசாதம் வாங்கியதும், காமாக்ஷியம்மன் கோவிலில் மரியாதை பெற்றதும் இன்றும் பசுமரத்தாணி போல மனதில் உள்ளது. இன்றும் ஆன்மீகத்தில் இருப்பதற்க்கு அவரே முதல் காரணம். அடுத்தது என் அன்னை சாப்பிடாமல் அடம் பிடிக்கும் போது எனக்கும் என் தம்பிக்கும் கம்பா ந்திக்கதை, மாணிக்க வாசகர் கதை, இராமாயணம், மஹாபாரதம், என்ற கதைகள் கூறி வயிற்றுக்கான உணவுடன், ஆன்மீக உணவையும் ஊட்டியவர்.

என் தந்தையைப் பற்றி எழுதும் போது நூலகத்திற்க்கு அவர் என்னை அறிமுகப்ப
டுத்தியதை சொல்லாமல் இருக்க முடியாது. அவர் எங்கள் ஊரின் மத்திய நூலகத்தின் உறுப்பினர், நான் ஐந்தாவது படிக்கும் போதே என்னையும் உறுப்பினராக ஆக்கி விட்டார், அவர் தினமும் புத்தகம் படிக்காமல் இருக்க மாட்டார், அவரைப் பார்த்தே நானும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன். சரித்திர நாவல்கள், பொன்னியின் செல்வன், சாண்டில்யன் நாவல்கள் என்று ஆரம்பித்து எவ்வளவோ புத்தகங்களை வாசித்துள்ளேன் இந்த தந்தையர் தினத்தில் அவ்ருக்கு நன்றிகள்.

ஆனால் இவ்வளவு அன்புதன் இருப்பவர்கள் நம்முடன் நிறைய நாட்கள் இருக்கமாட்டார்கள் என்பதற்கிணங்க ஒரு நாள் சைக்கிளில் செல்லும் போது ரயில்வே கிராசிங்கில் கீழே விழுந்து இடுப்பை முறித்துக் கொண்டார், எவ்வளவோ வைத்தியம் பார்த்தோம், கோயம்பத்தூர் தெலுங்கு பாளையம் கொண்டு சென்றோம் , வயதானதால் எலும்பு கூடவில்லை, முனிசிபாலிட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் கன்னிகாபரமேஸ்வரி பள்ளியிலும், பின் மில்லிலும் கடைசி வரை வேலை பார்த்த அவரை அது படுக்கையில் சாய்த்து விட்டது, அதன் மூலம் அவருக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது, அவருக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடம்பு துடைத்து விடுவது, பெட்பேன் வைத்து அதை எடுத்துக் கொண்டு சென்று சுத்தம் செய்வது, லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் எடுத்துக்கொண்டு வந்து தருவது என என்னால் முடிந்த அனைத்து சேவைகளையும் செய்தேன்.

நான் எட்டாவது படிக்கும் போது இந்த உலக வாழ்க்கை போதும் என்று எனது தமைக்கயர் இருவரும் எப்போதும் தங்கள் காலில்தான் நிற்க வேண்டும் என்று அவர்கள் இருவரையும் டீச்சர் டிரெயினுன்க்கிற்க்கு சேர்த்து இருவரையும் டீச்சராக்கிய எங்கள் தந்தையார் மறைந்தார். ஆனால் அவர் நினைவுகள் மட்டும் இன்றும் மறையவில்லை. தந்தையர் தினத்தன்று அவருக்கு அனந்த கோடி வணக்கங்கள்.

Friday, June 13, 2008

ஆத்தா .....நான் குண்டாயிட்டேன்!!!!!!!!!!!!

ஏங்கண்ணே அப்படி பாக்கரீங் பாஸாயிட்டா மட்டுந்தான் சந்தோசப்பதுணுமாங் குண்டாயிட்டா சந்தோசப்படவேண்டாங்களா?

அம்மா நான் வளர்ந்துட்டேன் மம்மின்னு காம்ப்ளான் விளம்பர கொழ்ந்தைகள் போல உங்க பேண்ட் உங்களூக்கே டைட்டானா உங்களுக்கான பதிவு இதாங்க.

இருபது வருசமா அம்மா போட்ட சாப்பாட்டை சாப்பிட்டும் ஒல்லிப் பீச்சானாவே இருந்தவங்க பொண்டாட்டி அம்மிணி வந்தப்ப மட்டும் எப்பிடி ஆறு மாசத்துல குண்டாயிராங்கன்னு ஒரு சந்தேகமிருக்குண்ணே, யாராவது சந்தேகத்தை தீர்த்து வைங்கண்ணே.

பின்ன நம்ம சொந்தக்கதை சோகக்கதைக்கு போகலாமாண்ணே கல்யாணம் ஆயி எட்டு வருமாயியும் அப்படியே இருந்தேண்ணே. திடீர்னு ஒரு நாள் டைபாய்டு காய்ச்சன்னு சொல்லி ஆசுபத்திரியில கொண்டு போய் போட்டுட்டாங்கண்ணே, டாகடர் மருந்து சேரல ஊசி போட்டுக்கோண்ணு சொல்லி ஒரு வாரம் ஊசி போட்டு குத்துயிரும் கொலையுயிருமாக்கி அனுப்பறப்ப, வயித்தில புண்ணு காரமாவும், கெட்டியாவும் ஒண்ணும் சாப்பிடவேண்டாம், சும்ம்மா பதினஞ்சு நாளு ரெஸ்ட மட்டும் எடுத்துக்கோங்கண்ணுட்டு அனுப்பிட்டாரு. டாக்டர் சொன்னாரேனுட்டு வீட்டுலையே இருந்து வெறும் இடியாப்பாம் , இட்டிலி, வேக வெச்ச காய்கறின்னு பதின்ஞ்சு நாள் கஷ்டப்பட்டு கஷ்டகாலமேன்னு ஆபீஸ் போறன்னைக்கு பேண்டை எடுத்து மாட்டுனா பத்த மாட்டேங்குது., எப்படியே அட்ஜஸ்ட் பண்ணி மாட்டிகிட்டு ஆபீஸ் போணண்னே, என்னப் பாத்து எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டார்ண்ணே. ஒருத்தர் சப்பி சீக்ஸ்(Chubby cheeks) ன்னு பாட வேற ஆரம்பிச்சாட்டாருண்ணே. அன்னையில ஆரம்பிச்சது இன்னைக்கு என்ன பண்ணுணாலும் ஒடம்பு கொறைய மாட்டேங்குதுங்க , நீங்க தான் ஒரு வழி சொல்லுங்களேண்ணா?

ஒரு மூணு வருசம் கழுச்சு ஒரு நாள் எலெக்ட்ரிக் ட்ரெயினை புடிக்க அவசரமா ஒடி கால் தடுக்கி கீழ விழுந்து காலை ஒடச்சுகிட்டு டாக்டர்கிட்ட போக , அவரும் பெருசா எக்ஸ்-ரே எடுத்து பாத்துட்டு எலும்பு முறிஞ்சிருக்கு மாவுக்கட்டுதான் போடணுன்னு தூக்க முடியாத மாதிரி பெரிய கட்டப்போட்டு வீட்டுக்கு அனுப்பிட்டார்ன்னே, கட்டையை வெச்சுட்டு எங்கண்ணே நடக்கறது, ஒரு மாசம் பாத்ரூம் மட்டும் போயிட்டு பெட்டுலயே உட்கார்ந்துட்டு, காலைல டிபன் சாப்பிடிட்டு, கொஞ்ச நேரம் புத்தகம் படிச்ச்சுட்டு, நல்லா படுத்து தூங்கிட்டு, அப்புறம் மத்தியான்னம் எந்திருச்சு சாப்பாடு சாப்டுட்டு, கொஞ்ச நேரம் டி.வி பாத்துட்டு மறுபடியும் தூங்கிட்டு, ஜாலியா ஆபிஸ் போகாம ஓபி அடிச்சுட்டு ஒரு மாசம் கழிச்சு கட்ட அவுத்துட்டு காலை ஊனுனேங்க எனக்கே நான் பயங்கர வெயிட்டா தெரிஞ்சேங்க. இத்தன நாளா லுங்கியிலயே இருந்துட்டு பேண்டை மாட்டுனா எதுவுமே பத்தலேங்க. அவசர அவசரமா கடைக்குப் போயி புதுப்பேண்டு வாங்கிட்டு போட்டுட்டு ஆபிஸ் போணா யாரும் கண்டுக்கவேயில்லைங்க, பேரை சொல்லி கூப்பிட்டன்னே எல்லோரும் கோரஸ்ஸா அடப்பாவி எப்படீங்க இப்பிடி குண்டானீங்கன்னு மூக்கு மேலே விரலை வெக்கறாங்க.

இன்னோரு தடவை ஸ்கூட்டர்ல போகறப்ப ஒரு கார்க்காரன் வந்து இடிச்சு கால் மேல ஸ்கூட்டர் விழுந்து கால் வீங்கி கட்டு போட்டு ஒரு பத்து நாள் சாப்பிட்டு சாப்பிட்டு பிளாக் பண்ணிகிட்டு உங்கார்திருந்துட்டு போய் வெயிட்டெடுத்து பார்த்தா 4 கிலோ ஏறியிருந்தேங்க.

ஓடம்பைக்குறைக்க ஓடி, நடந்து ஒண்ணும் பிரயோஜனமில்லைங்க, முட்டி தேஞ்சு வலி வந்ததுதாங்க மிச்சம். இப்ப யாராவது சின்னப்பையன் என்னப் பார்த்தா அங்கிள் நீங்க எந்தக் கடையில அரிசி வாங்கரீங்கறீங்கண்ணு கேட்டுடக்கூடாத்ண்ணு பயமா இருக்குதுங்க. அதனால வருத்தப்படாத வாலிபரண்ணங்கலே ஜாக்கிரதையா இருங்கண்ணே இந்த டாக்டக்ர்ககிட்ட. பாக்காலாங்கண்ணே.

உங்களுக்கும் ஏதாவது அனுபவம்னா பகுந்துக்கோண்ணேங்.